Thursday, December 9, 2010

குக்கூ கவிதைகள்

********************************************************
குக்கூ கவிதைகள் - கவிஞர் மீரா
********************************************************
கருப்பண்ணசாமி கோயிலில்
வெட்டப் பட்ட
ஆடுகளைப் பார்த்துக்
கால்கள் சேர்த்துக்
கட்டப்பட்ட கோழிகள்
தொண்டைக் குழிக்குள்
தொடர்கதை எழுதும்...
0
கோழியும் சேவலும்
குப்பையைக் கிளறும்
விடியற்காலையில்
கண்மூடிக் கிடக்கும்
ஊர்நாய் ஒரு மூலையில்
இரவெல்லாம் குரைத்த அசதியில்...
0
இதுதான் வேலை
மல்லாந்து படுத்து
சிகரெட் புகையை
ஊதி ஊதித் தள்ளும்
எங்கள் ஊருக்கு வந்த
புதிய சிமெண்ட் ஆலை...
0
கும்பிட்டுப் போனான்
குமரன் தீமூட்டி;
மல்லிசேரி பீடியை
எடுத்துப் பற்ற வைத்தான்
மயானத் தோட்டி
எரியும் அப்பா பிணத்தில்...
0
சிறகிருந்தாலும்
செம்மறி முதுகில்
அமர்ந்து செல்லும்
சுகமே சுகமெனச்
சொல்லாமல் சொல்லும்
கரிச்சான் குருவி...
0
குழாயிலிருந்து
விழுந்தது தண்ணீர் கனமாய்
சுற்று முற்றும்
பார்த்து விட்டுத்
தொட்டியில் விழுந்தேன்
அம்மணமாய் ...
*********************************

Saturday, September 25, 2010

காகிதங்கள் + கனவுகள் = மீரா

<>

-நெப்போலியன்

மீ.ராசேந்திரன் எனும் மீரா நம்மை விட்டுப் பிரிந்து எட்டு  வருடங்கள் (1-09-2002) ஓடிவிட்டன. ஆனால், மீரா என்ற பீனிக்ஸ் தமிழ் இருக்கும்வரை உயிர்த்தெழுதலுடன் இலக்கியவானில் சிறகசைத்துக் கொண்டுதான் இருக்கும். அர்ப்பணிப்பான வாழ்க்கையை இறுதிவரை இயக்கி முடிக்கும் இயல்புகொண்டோரை காலம் அவ்வளவு எளிதில் உதிர்த்து விடுவதில்லை மீரா என்ற இலக்கியவாதியை, பதிப்பகத்தானை, நேசமிகு மாமனிதனை தமிழ் இலக்கியவரலாறு தன் கருப்பையின் கருவாய் சுமந்தபடியே இருக்கும். சிவகங்கை அன்னம் அகரம் என்ற சாகாத வானத்தில் மீரா எனும் வெள்ளி மீன் சிமிட்டிக்கொண்டுதான் இருக்கும். மீரா ஒரு அர்ப்பணிப்பு ஆத்மா... 'நவீன இலக்கியத்தின்பால் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழுலகில் உருவான ஈர்ப்புக்கு மீரா தொடங்கிய அன்னம் பதிப்பகத்தின் செயல்பாடு மிக முக்கியமான காரணம். வலிமையான இலக்கியச் சூழலை உருவாக்குவதில் ஒரு பதிப்பகத்துக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. கவிதைகளிலேயே இயங்கி வந்த மீராவும் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி நினைத்ததால்தான் தன் இயங்கு தளத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ' ---- பாவண்ணன் மீரா ஒரு பொதுநலப்பூங்கா... '1959 முதல் துவங்கி 1965 - 1966 ம் ஆண்டுகளில் உள்ள அவரது கவிதைகளின் நோக்கமும் , தாக்கமும் மிக மிக அதிகம். மீராவின் கவிதைகள் முதன் முதலில் 1965ல் வெளியானது பிறகு அவரின் அடுத்த பதிப்பு 2002ல்தான் வெளியானது. இந்த 37 ஆண்டுகால இடைவெளிக்கு என்ன காரணம் ? ' ---- மு.மாரிமுத்து மீரா ஒரு சிந்தனைச்சிவப்பு... 'திராவிட இயக்கத்தில் வளர்ந்து மலர்ந்தவர் மீரா. அண்ணாவாலும்,கலைஞராலும் பாராட்டப் பெற்றவர் அவர். 70-களில் படிப்படியாக இடதுசாரித் திசையில் நகர்ந்து உறுதியான இடதுசாரிப் படைப்பாளியாகவும், சிந்தனையாளராகவும் விளைந்தார். ' -- பொன்னீலன் மீரா ஒரு புதுமரபி... 'தமிழ் இலக்கியத்தில் மரபுக்கவிதை சவலை நோயால் பீடிக்கப்பட்டு கவலைக்கிடமாகி நலிவுறும் நிலைக்கு வந்தபோதுதான், கவிஞர் மீரா புதுக்கவிதை என்னும் சிவப்பு அணுக்களை அதன் ரத்தத்தில் பாய்ச்சினார். ' ---- கவிஞர் பவேரா மீரா ஒரு பதிப்பகத்தேனீ... 'மீரா ஒரு கவிஞர் மட்டுமல்ல வணிக நோக்கம் இல்லாத பதிப்பக உரிமையாளர். ஜீவநேசமும் தோழமையும் குடிகொண்ட மாமனிதர். சிறந்த சிந்தனையாளர். கல்லூரி முதல்வர். ' --- தேனிசீருடையான் மீரா ஒரு அங்கதப்பூ... 'அவரைக் கடைசி முறையாகப் பார்த்தது ஒரு குதூகலமான சூழ்நிலையில். ஒரு விநாயக சதுர்த்தி நாளன்று கவிக்கோவுடன் என் வீட்டிற்கு வந்திருந்தார். கொழுக்கட்டைகள் தந்து உபசரித்தார் என் மனைவி. உங்க வீட்டிற்கு வரும்போது கொழுக்கட்டை கிடைக்கலாம் என்று நினைத்துக்கொண்டுதான் வந்தேன் என்றார் கவிக்கோ. அவருக்கு டயாபடாஸ் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லத்தான் நானும் கூட வந்தேன் என்றார் மீரா. அறை முழுக்கச் சிரிப்பு. அதை நினைத்தால் இப்போது மனம் கனத்துப் போகிறது. '--- மாலன் மீரா ஒரு கிரியாவூக்கி... 'நான் பதிப்பாளன் ஆனதற்கு ஒருவகையில் மீராதான் காரணம் என்று சொல்ல வேண்டும் ' -- காவ்யா சண்முகசுந்தரம் மீரா ஒரு வினைத்தொகை... 'அவர் கவிதையை வாழ்க்கையாகவும், வாழ்க்கையை கவிதையாகவும் ஆக்கியவர். சிவகங்கையில் மீராவுக்கு ஒரு நினைவு நூலகம் அமைக்க வேண்டும் என்பது என் ஆசை. நல்லவர்கள் அதை நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புகின்றேன் ' --- கவிக்கோ.அப்துல் ரகுமான் மீரா ஒரு குருபீடம்... 'கவிஞர் மீராவின் மாணவர்கள் மற்றும் சீடர்களைப் பற்றிக் குறிப்பிடுவது அவசியம். முனைவர் ம.பெ.சீனிவாசன் (சிவகங்கை), முனைவர் இரா.பாலச்சந்திரன்(ஆங்கிலப்பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்), பேராசிரியர் சாகுல் அமீது(புதுக்கல்லூரி சென்னை), முனைவர் கே.ஏ.குணசேகரன்(பாண்டிச்சேரி) ஆகியோர். அவருக்கு சீடர்கள் பலர். அவர்களில் முனைவர் சுபாசு சந்திரபோசு(திருச்சி), முனைவர் மு.பழனி இராகுலதாசன்(தேவகோட்டை) முக்கியமானவர்கள். ஓய்வுபெற்ற ஆசிரியரும் அவருடைய உறவினருமான முகவை சோ.சண்முகம் மீரா நடத்திய இலக்கிய விழாக்களில் ஒத்துழைத்தார். அவரின் மாணவர் ரா.பாஸ்கரன். மீராவின் இறுதிக்காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகிய இரண்டு இளைஞர்கள் குறும்படத்தயாரிப்பாளரும் எழுத்தாளருமான செழியன், அடுத்தவர் சந்திரகுமார். ' ---- நா.தர்மராஜன் மீரா ஒரு சமர்க்களச்சிங்கம்... வார்த்தை வசீகரங்களுக்காக எந்தக் கொள்கையையும் எழுதியவர் அல்ல மீரா. பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் செய்து வைத்தார். சொந்தமென்று ஏற்றுக்கொண்ட கோட்பாடு காரணமாகச் சொந்தச் சாதி ஆதிக்கக்காரர்களோடு சமரசம் செய்துகொள்ளாமல் சமர்க்களத்தில் இறங்கிய வரலாறு அவருக்கு உண்டு. பணிபுரிந்த கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சாதி அபிமானங்களைத் தூரத்தள்ளியவர் இந்த இலட்சியக்கவிஞர். '---- கவிஞர் சிற்பி மீரா ஒரு கற்பகதரு... 'மீரா ஓராயிரம் பெயர்களை ஊட்டி வளர்த்த ஒற்றைப்பெயர் . எப்படிப் போட்டாலும் பூ விழும் நாணயம். ' ---- பழநிபாரதி மீரா ஒரு காரணி... 'மீராவின் படைப்புகள் மிகப் பொருத்தமான தேவையான நூல்கள். சமுதாயத்தை விழிப்படையச் செய்யக்கூடிய நூல்கள். மனித சமுதாயத்திற்கு ஏற்புடைய நூல்கள். '---- கலைஞர் மு.கருணாநிதி மீரா ஒரு புதுக்குறிஞ்சி... 'அவர் ஒரு குறிஞ்சிப்பூ. போதிய அளவு கண்டு போற்றப்படாத கவிஞர் அவர். திராவிட இயக்கக் கவிஞர்களுக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேர்ந்தது. துதி பாடத் தெரியாதவர்கள் அங்கே தலை நிமிர்தல் இயலாது. மீரா எனும் பாவலன் தனித்திறன் உடையவன். மரபுப்பாடல்களில் பல சித்து விளையாட்டுக்கள் கண்டவன். அவனது உரை வீச்சுக்கள் ஒப்பற்றவை. உள்ளடக்கமும் புதுமையுடையது. வடிவ யாப்பும் புதிய பரிணாமம் காட்டுவது ' ---- அறிஞர் தமிழண்ணல் மீரா ஒரு காகிதச்சிற்பி... 'மீராவின் காகிதங்கள் கல்வெட்டுக்களாய் காலத்தை வென்று வாழக்கூடியவை. அக்காகிதங்களில் அவர் தமிழ் இலக்கியமாக நிலைத்து நின்று நீடித்து வாழ்வார். '---- இரா.சுப்பராயலு மீரா ஒரு விழிப்புணர்வுவாக்கியம்... 'தமிழக மக்களிடையே புத்தகப் புத்தாடைகளை வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்க பிற பதிப்பாளர்களையெல்லாம் ஒன்று கூட்டிப் புத்தகக் கண்காட்சி நடத்தும் திருவிழாவிலும் மீரா ஒரு அறங்காவலர் போல விளங்கினார் ' ---- சு.குழந்தைநாதன் மீரா ஒரு தேமா... 'மீரா இந்த தேமாச் சீருக்குரிய ஈரசைப் பெயர், பெற்ற புகழ் இணையற்றது. மீரா இந்தப் பெயரை நினைக்கும்போது பெண்மைக்கேயுரிய நல்லியல்புகள் யாவும் நம் முன் தோன்றும். ராசேந்திரன் இந்த இயற்பெயரை எண்ணும்போது ஒரு பெரு வீரனுக்கே உரிய வீறும் வினைத்திறமும் விளங்கித் தோன்றும். அவரது கவிதைகளில் இவ்விரு இயல்புகளையும் கண்டு மகிழலாம். '---- ம.பெ.சீனிவாசன் மீரா ஒரு போராளி... 'அறிஞர் அண்ணா மீராவின் கவிதைகளைப் படித்ததோடு, கவனித்தும் வந்த காரணத்தால் அண்ணாவின் கடைசி மடலில் திராவிட இயக்கக் கவிஞர்களில் மீ.ராசேந்திரன் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணா தன் இயக்க மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்து எழுதிய கடிதத்தில் 'சாவா சந்திப்போம், வாழ்க்கை நமக்கென பூவா புறப்படுவோம், புல்லியரைத்தூள் செய்வோம் ' எனும் போர்க்குணம் மிக்க மீராவின் கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார் ' ---- சுபாசு சந்திரபோசு மீரா ஒரு மையம்... 'அறுபதுகளின் பிற்பகுதியில்... சென்னை வந்தால் திருவல்லிக்கேணியிலிருந்து கோட்டை,அங்கிருந்து பிராட்வே,அப்படியே மூர் அங்காடிப் பழைய புத்தகக்கடை, மீண்டும் திருவல்லிக்கேணி,பழைய புத்தகக்கடை வரிசை என்று ஒரு நிதானமான சூறாவளியாய்... ஏதாவது கேட்டுத் துளைத்துக் கொண்டே வரும் தம்பிமார்கள் கொண்ட ஒரு சின்ன மேகக்கொத்தைத் தள்ளிக்கொண்டு நடந்தே திரிந்து வந்த அந்தக் கால்கள் மிகுதியும் வாங்குவது புத்தகங்கள்தாம். அந்தச் சுமையைப் பறித்தாலும் தர மறுத்துத் தாமே சுமந்து வரும் அந்த உறுதியான கைகள்... மறுபடியும் மாலையில் மரீனா மணலில் வளையும் பெரியசாமி தோளில் கைபோட்டு உந்தியபடி இலக்கியம் பேசிக்கொண்டு முந்தி எட்டுவைத்துப் போகும் இவரைப் பார்த்தபடி பொன்னம்பலம் கேட்பான். 'அன்ணனுக்குக் கால் வலிக்கவே செய்யாதா ? ' 'ஒரு சொல்லைக்கூட இழந்துவிடக்கூடாது ' என்று ம.பெ.சீ.யும், ப.கா.வும், ஞானசேகரனும், இராசரத்தினமும் நானும் ஈடுகொடுத்து நடக்க என்னதான் முயன்றாலும் ஓரடி முந்தியே போய்க்கொண்டிருக்கும் இந்தக் கால்கள். எந்த ஊரில் இருந்தாலும் பார்க்கச் சென்றால் பேருந்து நிலையம் வரை கூடவே நடந்து வந்து வழியனுப்பிவிட்டுச் செல்லும் அந்தக் கால்கள்... ' ---- இக்பால் மீரா ஒரு சினேகமழை... 'இறுதியாக நினைத்து மகிழ்வதற்கு மனிதநேயர்களிடம் கண்டதும் கொண்டதுமான நட்புதான் இருக்கும் என்று நம்புகிறேன். முதல் நாள் காட்டிய அன்பையும் பரிவையும் வாழ்வின் இறுதிவரை காட்டுபவர்களை நினைத்துப் பார்க்கும்போது அவர்கள் காட்டும் அன்பும் பரிவும் அவர்களது இயல்பு என்ற முடிவுக்கு வருகிறேன். கவிஞர் மீரா அவர்கள் இயல்பும் அதுதான். '---- இன்குலாப் மீரா ஒரு கனவு... 'மீரா உடல்நலக் குறைவினால் சிறைப்பட்டுவிட்டார் என்று அறிந்து சிவகங்கை போனேன். மனம் கனத்துக் கிடந்தது. அண்ணி, பஞ்சு வந்திருக்கிறார் என்றவுடன் எழுந்து வந்தார். தாடியோடு கூடிய அந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு அழுகையாக வந்தது. சமாளித்துக் கொண்டு 'என்ன அண்ணே இது ? '-அவரும் கலங்கினார். 'கி.ராஜநாராயணன் எப்படி இருக்கிறார் ? '- விசாரித்துப் பேச்சை மாற்றினார். 'படுக்க வைத்து விட்டது ' என்பதுதான் அவரால் சகித்துக்கொள்ள முடியாத துயரமாக இருந்தது. ' ---- க.பஞ்சாங்கம் மீரா ஒரு அசராஅலை... 'அப்போது சிவகங்கையிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் ஒரே பேருந்துதான் இருந்தது. வசதியான சாய்வு இருக்கைகள் இருக்காது. சென்னையிலிருந்து சிவகங்கை வந்தால் நாள் முழுக்கத் தூங்கினாலும் அழுப்புத் தீராது. ஆனால் பயணங்களில் அவருக்கிருந்த ஆர்வம் அதிசயமானது. சென்னையிலிருந்து காலையில் வருவார். ஒன்பது மணிக்கு மதுரைக்கு கிளம்புவார். திருச்சி,பிறகு பொள்ளாச்சி, கோயம்புத்தூர் , கூட்டங்கள், சந்திப்புகள், பதிப்பகவேலைகள், ஒரு சாம்பல் நிறப்பெட்டியுடன் கிளம்பிவிடுவார். உடன் சதுரம் சதுரமாக சசியின் புத்தகக்கட்டுகள். அவர் வாழ்நாளின் பெரும்பகுதி பயணங்களிலேயே கழிந்தது. மதுரையிலிருந்து சிவகங்கைக்கு வரும் கடைசி இரவுப் பேருந்துகளில் குறைந்தது வாரம் இரண்டு முறையாவது அவரைப் பார்க்க முடியும். இத்தனை உழைப்புக்கிடையில் கேட்பவருக்கெல்லாம் முன்னுரை எழுதினார். பாரதி நூற்றாண்டு விழா நடத்தினார். நவீன வாசனையற்ற செம்மண் நிலத்தில் கவிதை இரவு நடத்தினார். புத்தகங்கள் மீதான அவரது காதல் அளவிடமுடியாது. வீட்டில் திரும்பும் இடமெல்லாம் புத்தகங்கள். கையெழுத்துப் பிரதிகள். வடிவமைப்பு பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் ஆர்வமாகப் பேசுவார் ' ---- செழியன் மீரா ஒரு விருது... 'வாழ்ந்த வாசம் மட்டும்தான்... மீராவின் குடும்பம் சுவைக்க முடிந்த அவரின் சொத்து. அவரின் பெட்டியில் இருந்தவையெல்லாம் ஒரு வேட்டியும் நூறு ரூபாய்வரை கொடுத்து வாங்கும் சட்டையும் தவிர முழுவதும் பலரின் எழுத்துக்கள்தான். இன்று பேசப்படும் பல புத்தகங்கள் அவர் தீண்டியதால் கலை வடிவமானவை. வார்த்தைகளையும் வரிகளையும் செதுக்கி அழகியல் கொள்ள மறைந்து தொழில் செய்தவர். படைப்பாளியாக மட்டும் மீரா செயல்பட்டு இருந்தால் தமிழ் இலக்கியத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கும் '---- க.வை.பழனிசாமி மீரா ஒரு வானம்... 'குறிப்பாக, எழுதுபவர்களுக்கு வலதுகையில்தான் அதிக இயக்கம். வலது கையில் கடிகாரம் கட்டிக்கொண்டால் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை நிறுத்தாமலே நேரம் பார்த்துவிடலாம். வலது கைக்கு கடிகாரத்தைக் கொண்டு வந்து கட்டிய காரணம் இது என்ரு வெகு சிலர்க்கே தெரிந்திருந்தது. அவர்களுள் கவிஞர் மீரா ஒருவர். மீரா உலக மக்கள் எல்லோரும் கவிதை எழுத வேண்டுமென்றும் முடிந்தால் அவை அத்தனையும் புத்தகங்களாகப் போட வேண்டுமென்றும் நினைத்தார். கவிதை வெளிப்பாட்டில் அவ்வளவு விரிந்த மனம் மீராவுக்கு ' --- கந்தர்வன் மீரா ஒரு யுகம்... 'எனது மனைவியை அழைத்துக்கொண்டு சிவகங்கையில் அவர் வீட்டுக்குச் சென்றபோது, மனித நேயராக கடைசி நிமிடம் வரை வாழ்ந்த ஒரு கவிஞன் மரணமற்ற பெருவாழ்வில் இருப்பதையும் அதே சமயம் அவர் வசித்து வந்த அந்தத் தேகம் அசைவற்றுக் கிடந்ததையும் பார்த்துக் கலங்கினேன். கை குவித்தேன் '---- பெ.சிதம்பரநாதன் மீரா ஒரு புத்தகச்சந்தை... 'புத்தகம் சம்பந்தமாய் வந்தாய் -- ஒரு புத்தகச் சந்தையில் பார்த்துக் கொண்டோம் புத்தகமாகவே ஆனாய், நண்பனே. '---- கி.ராஜநாராயணன் மீரா ஒரு தராசு... 'மீரா என்ற கல்லூரி ஆசிரியரின் போராட்ட முகத்தையும் நாம் உற்று நோக்கவேண்டும். எமக்குத் தொழில் கவிதை என்பதை முகமூடியாய் அணிந்து கொண்டு தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டதில்லை. கல்லூரியில் நேருக்கு நேர் நின்று எதிர் கொண்ட போர்க்குணம் அவருடையது. ஆசிரியர் நலன் காப்பதற்கான போராட்டங்களின்போது உண்ணாவிரதம் இருப்பதற்கோ, கைதாகிச் சிறைச்சாலைகளில் அடைபடுவதற்கோ அவர் என்றைக்கும் பின்வாங்கியதே இல்லை. கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக அண்ணா சாலையில் ஒரு நாள் முழுக்கச் சுட்டெரிக்கும் வெயிலில் உடலை வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருந்ததை இன்று நினைதாலும் நெஞ்சம் பதைக்கும் '---- இளம்பாரதி மீரா ஒரு இளகியநிலவு... 'எழுத்தாளர்கள்மீது மிகுந்த மரியாதையும் அக்கறையும் கொண்டவராக இருந்தார் மீரா. அவர்களில் பலர் வாழ்க்கை நன்றாக இல்லையே என்று வருந்தியிருக்கிறார். மலையாள எழுத்தாளர்கள்போல் அவர்களுக்கும் போதிய வருமானம் உத்திரவாதம் செய்யப்படவேண்டும். அதற்காக அங்கிருப்பதுபோல் எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம் தோன்ற வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் ' ---- எஸ்.விஸ்வநாதன் மீரா ஒரு உலகம்... 'மீரா வெறும் கவிஞர் மட்டுமன்று. அவர் சிறந்த வாசகர். பேராசிரியத் தன்மையற்ற பேராசிரியர். மனிதர்கள் சாகிறபோது அவர்களுக்குள் உலகங்கள் சாகின்றன என்றும் சொல்வார்கள். கவிஞர் மீரா மறைந்தபோது எனக்குள் பல இலக்கிய உலகங்கள் இறந்து போய்விட்டன ' ---- இந்திரன் மீரா ஒரு ஒளி... 'திராவிட முன்னேற்றக்கழகம், இடதுசாரி இயக்கங்கள், பல்கலைக்கழகங்கள், மூட்டா, பதிப்பகத்துறை, படைப்பாளிகள், சாகித்ய அகாதமி, தமிழ் வளர்ச்சித்துறை இவற்றின், இவர்களின் எந்த வெளிச்சமும் மீராவின் மீது உரிய நேரத்தில் உரிய அளவில் விழவில்லை ' ---- கல்யாண்ஜி மீரா ஒரு சமத்துவப்புறா... 'புதுமைக்கவிஞன், போர்க்களப்புலவன், அறத்தின் நாயகன் , அனைவர்க்கும் தோழன், சமத்துவ வேட்கையால் சரித்திரம் படைத்தோன், தன்னலமின்றித் தமிழ்ப்பணி புரிந்தோன், தமிழ் உள்ளவரை அவன் புகழ் வாழும் ! ' ---- தி.க.சிவசங்கரன் மீரா ஒரு நம்பிக்கை... 'கவிஞர் மீரா நம்பிக்கை மனிதர். தனக்கு எதிராக உலகமே சுழன்று தாக்கிய போதிலும் நம்பிக்கை மனிதர்கள் தளர்ந்து விடுவதில்லை. கம்பீரமாக எழுந்து நின்று தனக்காக வாழ்க்கையைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்து விடுகிறார்கள் ' ---- சி.மகேந்திரன் மீரா ஒரு தோழமைக்கடல்... 'இப்படியொரு கலப்படமற்ற அன்பை, நிபந்தனைகளற்ற நட்பை இனி யாரிடம் பெறப் போகிறோம். பூமிக் கிண்ணத்தில் வார்க்கப்பட்ட அவரது வாழ்வென்னும் பாலினை ஓர் துளியும் மிச்சம் வைக்காது அருந்திவிடும் அன்னம். ஆம் அவரது வாழ்வும் கலப்படமற்றது. அது அகரம். ' ---- கலாப்ரியா மீரா ஒரு சரி... 'அன்னம் பதிப்பகத்தின் நூல்களையெல்லாம் அச்சிடத் தாமே அகரம் என்ற பெயரில் அச்சகம் ஒன்றையும் நடத்தினார். பிழைகள் இல்லாது நூல்களை அச்சிட்ட பெருமை அகரத்திற்கு உரியது '---- பு.இராசதுரை மீரா ஒரு முரண்... 'மீராவின் கனவுகள் ஏதும் நனவாகுமா என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர் கனவொன்று பொய்த்ததை இங்கு சொல்ல வேண்டும். மீரா நாத்திகராக வாழ்ந்தார். தனது சாவிலும் கூட அவர் அவ்வாறே வாழ முடியும் என கற்பனைகள் செய்திருக்கக்கூடும். பகுத்தறிவு, பொதுவுடைமைச் சிந்தனைகள் மீதும் இயக்கங்கள் மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ஆனாலும் அவரது உடல் இந்து மதச் சடங்குகளோடு எரியூட்டப்பட்டது. தன்னை ஏங்கல்ஸின் மாணவன் என்று பெருமையோடு தன் காதலியிடம் அறிமுகம் செய்து கொண்டவர் அவர். அவரது மரணத்தையும் விஞ்சிய அழுத்தத்தை அவரது உடல் எரியூட்டு உண்டாக்கியது. பாரதி குடில் உருவாக்க அவர் நினைத்த இடத்தில் அவரை அடக்கம் செய்திருக்கவேண்டும். '---- குருசாமி மயில்வாகணன் மீரா ஒரு கறையிலாக்கவிதை... 'மீரா ஓர் இனிய கவிதை. மீரா கடவுள் எழுதிய கவிதையா... காலம் எழுதிய கவிதையா... சமூகம் மாற்றி வடிவமைத்த காவியமா... ? ' ---- தனுஷ்கோடி ராமசாமி மீரா ஒரு வரலாறு... 'உ.வே சாமிநாதய்யரால் பல பழைய இலக்கியங்கள் நமக்குக் கிடைத்தன. மீரா இருந்திராவிட்டால் நமக்குப் பல புதிய இலக்கியங்கள் கிட்டியிரா ' ---- நீலமணி மீரா ஒரு காதலன்... 'குழல் ஊதும் கண்ணனைக் காதலித்தால் மீரா. இனிதான பாடும் குரலுக்காக என்னைக் காதலித்தார் கவிஞர் மீரா சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளைங்கலைப் பட்டம் முதலாண்டு படித்த காலம் 1979. எங்களுக்கிடையே காதல் அரும்பிய காலம் அது. ' ---- கே.ஏ.குணசேகரன் மீரா ஒரு பன்முகவெண்பா... 'சமணர் மொழியில் சொன்னால் அவர் ஒரு பக்குவ சீவன். பேராசிரியர் கூற்றில் சொன்னால் அவர் புதுக்கவிதையின் உ.வே.சா. மூட்டாவினர் கருத்துப்படி அவர் கோரிக்கைகள் நிறைவேற்றிய கோடிக்கைகள். அரசுக்கல்லூரி ஆசிரியர் பார்வையில் அவர் கல்லூரி ஆசிரியரின் குரல். சுருங்கச் சொன்னால் மனிதம் என்பதின் மருதுவின் கோட்டோவியம் அவர். '---- க.முத்துச்சாமி மீரா ஒரு சிவகங்கை... 'என் தந்தையையொத்த வயதில் ஒரு நெருங்கிய நண்பரைப்போல் மூத்த சகோதரரைப்போல் தனது இறுதிக் காலங்களில் என்னோடு அவர் கொண்ட அன்பு . சிவகங்கை எனும் ஊரின்மீதான பாசத்தைத்தான் விதைத்து விட்டிருக்கிறது. மீரா அவர்களின் ஊர்ப்பாசம் தாய்ப்பாசத்திற்கு நிகரானது. '---- சந்திரகுமார் 'மீரா எனக்குச் சிறுகதவாய் இருந்தார். லேசாகத் தொட்டாலே திறந்து கொள்ளும் கதவு. மீராவுக்கு ரொம்பவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் நான். ஆனால், அந்த மீராவை நேரிலோ கூட்டங்களிலோ ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை. சந்தித்ததில்லை. பெரிய இழப்பாக உணர்கிறேன் இப்போது ' என்று சொல்லும் பெருமாள் முருகனின் வார்த்தைகள் எனக்கும் பொருந்தும்... காரணம் நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த அந்த மாகவியின் படைப்புகளிலேயே எனக்குள் அவன். பார்த்ததில்லை... பேசியதில்லை... பழகியதில்லை... இருப்பினும், மீரா எனும் வார்த்தையும் அது செய்த இயக்கமும் என் ஆத்ம நெருங்குதலின் இனிய பதியமாய் என்றென்றும்... மீரா என்ற புல்புல்லின் நினைவோசை அவர் படைத்த சாகாத வானத்தில் சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கும் எந்நாளும்... விடியலின் ஒவ்வொரு பூபாளமும் மீரா என்ற கீர்த்தனையை இசைத்துக் கொண்டுதான் இருக்கும் யுகத்தின் இறுதிவரை... மீரா நம்மை விட்டுப் பிரிந்த வருடங்கள் தங்களின் தொலைவைச் சொல்லலாம் ஆனால், தோன்றி மறைந்து மறையாமல் இருத்தலின் உயிர்ப்பை உணர்கின்ற ஓவ்வொரு படைப்பாளிக்குள்ளும் மீரா வாழ்கிறார்... ---- நெப்போலியன் சிங்கப்பூர்

உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா

<>இராகுலதாசன்

1. 9. 2003 ஆம் நாள் இந்த சூரியன் சிவந்த பூமியாம் சிவகங்கை மண்ணில் கிரகணங்ககள் பதித்த போது சற்று வியப்புற்று உற்றுத்தான் கண் பதித்திருக்க வேண்டும். இதென்ன ஊர் முழுவதும் கண்ணை ஈரமாக்கும் சுவரொட்டிகள்.. .. யாருடைய படம் ? கவிஞர் மீரவுடைய படம்! ஓ ! ஒருவருடம் ஓடி விட்டதா ? என வியந்த சூரியன் தன் கிரணக் கரங்களால் மீராவுக்கு அஞ்சலி வணக்கம் செலுத்தி விட்டு மேலே போகிறான்.. .. .. ச்ிவகங்கைக்குக் கல்வியால், அரசியலால், சமூக சேவையால் பெருமை சேர்த்த பெருமக்கள் அவ்வப் போது மறைந்த பொழுதுகளில் எல்லாருடைய நெஞ்சங்களிலும் ஓர் ஆறுதல் ஒரு ஆசுவாசம் இருந்தது “ பாதகமில்லை மீரா இருக்கிறார்.. .. நம்முடைய மீரா இருக்கிறார்..: ஆனால் இப்போது அந்த மீரா இல்லை “ மீரா இல்லாத சிவகங்கையா ?” என்று நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை கடந்த ஓராண்டு காலமாக “ மீரா” என்னும் தேமாப் பெயரை நினைந்தும் நினைந்தும் கண்ணீரால் நனைந்தும் நனைந்தும் போன நெஞ்சங்கள் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் அதோ கூடி நிற்கின்றன. 2, சிவன் கோவில் தெற்குத் தெரு” என்ற முகவரி தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத அகவரியாகவே ஆகி விட்டது. இந்த முகவரியில். அன்னம்- அகரம் நிறுவனத்தின் படிகளை மிதிக்காத கவிஞர்கள் தமிழகத்தில் இல்லை. எண்ணங்களை , எழுத்துக்களைப் பாரமாய்ச் சுமந்து திரிந்த இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் இளைப்பாறுதல் தந்த வேடந்தாங்கல் இந்த முகவரி! கவிஞர்கள் , கட்டுரையாளர்கள், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், அரசியல் ஆர்வமுடையவர் சமுதாயச் சிந்தனை மிக்க இளைஞர்கள் அனைவருக்கும் குளிர்தருவாய் தரு நிழலாய் நிழலிட்ட முகவரி இது1 1.9.2003 ஆம் நாள் கவிஞர் மீராவின் முதலாவது நினைவு நாள். புதிய இலக்கித்தின் நாடியாய் நரம்பாய் எப்போதும் இயங்கிக் கொண்டிருந்த அச்சக அறையும் அலுவலக அறையும் ஏதோ ஒரு இனம் புரியாத மெளனத்தால் நிரம்பிக் கிடக்கின்றன. அறையின் உள்ளே போகும் ஒவ்வொருவரும் நின்று , தயங்கி உள்ளே நுழைகின்றனர். “ மீரா இங்கே தானே நிற்பார் இப்படித்தானே மாடியிலிருந்து வருவார்; இதுதானே அவர் உட்கார்ந்திருக்கும் இடம்” என்று எண்ணி எண்ணி நுழையும் ஒவ்வொருவரின் கால்கள் சிறிது தளரத்தான் செய்தன. “ மரணம் என்பது இயற்கைதானே” என்று ஆயிரம் கவிதைகள் செய்த கவிக்கோ அப்துல் ரகுமான் மீராவின் பிரிவைத் தாங்க முடியாமல் துயரத்தின் உருவமாய் அமர்ந்திருக்கிறார் கவிஞர் சிற்பி பேராசிரியர் பாலா பேராசிரியர் சுபாசு முதலிய பெருமக்கள் விழாவின் பணிகளை முறைப்படுத்துகின்றனர். முதலாம் நிகழ்ச்சி கவிஞரின் படத்திறப்பு. படத்தை திறந்து வைத்தவர் சிவகங்கை அரச குடும்பத்தைச் சார்ந்த உயர்திரு வே. திருவரங்கராசன் அவர்கள் புகழ் என்னும் மலர் பூத்த பேராலமரம் தான் உங்களுக்குத் தெரியும் எனக்கு அது பயிரான நாற்றாங்கால் காலத்திலிருந்தே அறிமுகம் என்று கவிஞருடனான அநுபவங்களை திருவரங்கராசன் கண்கள் பணிக்க எடுத்துரைத்தார் . மன்னர் கல்லூரிச் சிக்கல்களில் தனக்கு நேர்ந்த தடைகளையும் மீராவ்ின் நியாயமான போராட்ட உணர்வுகளையும் எடுத்துரைத்தார். “ மீராவோடு நான்” என்ற கருத்தரங்க நிகழ்ச்சி கவிஞர் சிற்பிதலைமையில் அமைந்தது. நட்புறவு -சகோதர பாசம் என்ற உணர்வுகளின் விளிம்பில் மெய் சிலிர்த்து நின்ற கவிஞர் சிற்பி ஓர் அற்புதச் சிற்பத்தைச் செதுக்குவது போலவே சின்னச் சின்னக் கவித்துவச் சொற்களால் மீராவின் பண்புகளைத் தீட்டிக் காட்டினார். பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழுவில் மீரா இருந்த போது பாடக்களைப் பார்ப்பதோடு நூலாசிரியரின் வாழ்க்கைப் பாடுகளையும் மிகுந்த பரிவோடு மீரா சுவைத்து நூல்களைத் தேர்வு செய்வார் என்று சிற்பி குறிப்பிட்டார். மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆசிரியர் மன்ற நிறுவுனரும் சிவகங்கை கல்லூரியில் மீராவுடன் பல ஆண்டுகள் பணியாற்றியவருமான பேராசிரியர் நா. தருமராசன் “ மீராவும் நானும் எதிர் எதிர் முரன்பாடுகளைக் கொண்டு ஒருவரால் ஒருவர் என வளர்தோம். முரன்பாடுகளைக் கொண்டிருந்தாலும் பொது நலம் சமுதாய மேம்பாடு என்று வரும் போது இணைந்து சாதிக்க முடியும் வெற்றி பெற முடியும் என்பதற்கு எங்கள் வாழ்க்கையே சாட்சி” எறு உரைத்தார். “வயதால் சிறியவராகிய அவர் முந்திக் கொண்டு விட்டாரே என நெகிழ்ந்தார். அடுத்து வந்த கவிஞர் க..வை பழனிச்சாமி ,” மீரா எழுதத் திட்டமிட்ட நாவல் நமக்குக் கிடைக்கவில்லை. அந்த நாவலின் கதா நாயகன் வேறுயாருமல்ல மீரா தான் நாயகன் .ஓர் அற்புதமான கவிஞன் படைக்க இருந்த நவீனம் நமக்குக் கிடைக்காமல் போனது. தமிழ் இலக்கியத்திற்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத நஷ்டம்” என்று வருத்தத்தோடு சுட்டிக் காட்டினார்.. மீரா செய்த ஓயாத பயணங்களின் போதெல்லாம் அவருடைய பொருளாகப் பெட்டியில் நூறு ரூபாய் மட்டுமே பெறுமானமுள்ள சட்டையும் வேட்டியும் தான் இருக்கும். மற்றபடி பெட்டிக்குள் இளைஞர்கள் எழுதிய இலக்கியங்களின் கையெழுத்துப் பிரதிகள் தான் நிரம்பிக் கிடக்கும் என்றார்.. தனது மூன்று புத்தகங்களையும் மீராவின் அகரம் வழியே அச்சிட்டு வெளியிட்ட உணர்வுகளை பேராசிரியர் பு. ராசதுரை நேசம் மிகுத குரலில் எடுத்துரத்தார். நூலுக்குப் பெயர் வைத்தல், ஆசிரியர் குறிப்பை எழுதுதல், அட்டையை நேர்த்தி செய்தல், பிழையின்றி அச்சடித்தல் என்று இத்தனை பணிகளையும் ஒரு சேரப் பார்த்த மீரா இல்லையே என்று ராசதுரை மனம் கலங்கினார். ஆனந்த விகடனில் வெளியான தனது சிறுகதையைப் படித்து உடனே ஒரு பாராட்டுக் கடிதமும் எழுதி , பிறகு கதைகளை அவராகவே கேட்டு வாங்கி வெளியிட்ட மீராவின் பெருந்தன்மையை தனுஷ்கோடி ராமசாமி உணர்ச்சியுடன் சுட்டிக் காட்டினார். அடுத்துப் பேசிய டாக்டர். ம.. பெ சீனிவாசன் மீராவின் மரபுக் கவ்ிதைகளின் சிறப்புகளை எடுத்துரைத்தார். ஆசிரியர் மாணவர் என்னும் உறவை மிகவும் நெருக்கமாக்கியவர் உருக்கமாக்கியவர் மீரா என்றும் சுட்டிக் காட்டினார். எழுத்தாளர்தேனி சீருடையான் கவிஞரின் மூன்றும் ஆறும் நூல்தான் தொடர்பை ஏற்படுத்தியது என்றும் கடை என்ற தனது நாவலை மீரா அதன் உள்ளடக்கம் கருதி வெளியிட்டார் என்றும் குறிப்பிடார். கலை பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குநர் நா. சுலைமான் மீராவின் எளிய அணுகு முறைகள் இனிய உரையாடல்கள் பற்றி நினைவு கூர்ந்தார். விஜயா பதிப்பகம் வேலாயுதம் கோவையில் என்னைப்போல் யார் வேண்டுமானாலும் புத்தகம் வெளியிடலாம் ; சிவகங்கைப் பகுதியிலிருந்து நேர்த்தியாய் கால ஓட்டம் உணர்ந்து புதிது புதிதாய் வேறு யாரால் வெளியிட முடியும் ? மீராவால்தான் முடியும் என்றார். சின்ன சின்ன உணவு விசயங்களில் அதே போல் மலர் தயாரித்தல் போன்ற பெரிய விசயங்களில் மீராவின் செயல்பாடுகள் மாசில்லாத குழந்ந்தை மனம் கொண்டவையாக இருக்கும் என்று டாக்டர் மோஹன் நினைவு கூர்ந்தார். மீரா சுவை மிக்க சம்பாஷணைக் காரர் என்றும் அப்படி ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது தான் “ அன்னம் விடு தூது” பத்திரிக்கையின் வடிவ அமைப்பு உருவானது என்றும் , இளம் கவிஞர்களில் கவிதைகளை “நவ கவிதை வரிசை” என்று மீரா வெளியிட்டது கவனிக்கப் பட வேண்டிய பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டார்.” நான் தமிழ்ப் பணி செய்கிறேன் என்று சொல்லக் கூடிய பெருமை கல்லூரிப் பேராசிரியர்களுக்குள் மீராவுக்கு மட்டுமே உரியது என்று பாராட்டிய கவிஞர் கந்தர்வன், மீரா இல்லை என்றால் தனது படைப்புகள் நூலாகியிருக்க முடியாது என்றார். எட்டைய புரம் பாரதி நினைவகக் காப்பாளர் இளசை மணியன் பாரதி மீது மீரா கொண்டிருந்த அளப்பரிய மரியாதையைச் சுட்டிக் காட்டினார். எட்டையபுரம் பாரதி விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற மீரா வழிவகை அமைத்துத் தந்ததை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். என்னை அன்புடன்” அண்ணன்” என்றழைக்கும் தம்பி மீராவை இழந்தது பெரிய இழப்பு என்று பேராசிரியர் நா. இலக்குமணப் பெருமாள் உள்ளம் நெகிழ்ந்தார். தொடக்க காலத்திய உறவுகளைச் சொல்லுவார் என்று மிகவும் எதிர் பார்க்க்கப் பட்ட கவிஞர் நா. காமராசன் மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் அறிவு மதி , மு. பழனிஇராகுலதாசன், சுபாசு, ரவி சுப்பிரமணியன் , பிரான்சிஸ் கிருபா, திலகபாமா ஆகியோர் பங்கேற்றனர். கவிஞர் மீராவின் பன்முக ஆளுமை குறித்தும் குறிப்பாக அவர் நாலா பக்கங்களிருந்தும் ஜன்னல்களைத் திறந்து வைத்து பல்வேறு சோதனைப் படைப்புகளை வெளியிட்ட துணிவு குறித்தும் கவிஞர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர் விவாதங்கள்- விமர்சனங்கள் என்ற அமர்வுக்குத் தலைமை ஏற்ற பா. ஜெயப் பிரகாசம் தமிழ் இலக்கியச் சூழலில் குழு மனப்பான்மை பெருகி வ்ிட்டது என்றும் அதனால் ஒரு பக்கம் சார்ந்த கருத்துக்களே திட்டமிட்டு பரப்பப் படுகின்றன என்றார். ஜெயகாந்தன் எழுத்துக்களையே மறுதலிக்கும் அளவுக்கு குழு மனப்பான்மை குரூரம் அடைந்து விட்டது என்றும் மீரா நினைவு நாளைக் கொண்டாடும் போது அர்த்தமுள்ள விவாதங்கள் கட்டமைக்கப் படவேண்டும் என்றார். பேராசிரியர் பஞ்சாங்கம் மேலை நாட்டு இலக்கிய அலைகள் பற்றிய விமர்சன நூல்கள் தமிழில் போதுமான அளவு மொழியாக்கம் செய்யப் படவில்லை என்றும் மீராவின் பெயரால் கூடும் இலக்கிய ஆர்வலர்கள் இது குறித்து ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. முதலாம் ஆண்டு நினைவு நாளில் “அகரம்” சார்பாக மீராவின் கட்டுரைகள்”, “காலத்தின் குரல்” என்ற இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன கட்டுரை நூலை அறிஞர் தமிழண்ணல் வெளியிட விற்பனை வரி விளக்க இதழின் ஆசிரியர் மு. மாரிமுத்து பெற்றுக் கொண்டார். “காலத்தின் குரல்” நூலைப்பேராசிரியர் தர்மராசன் வெளியிட நா. சுலைமான் பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் சிறப்புரையாக தமிழண்ணல் பேசும் போது “ மீரா என் மாணவர் ஆனால் என்னை அண்ணன் என்றே பாசமுடன் அழைப்பார். என் மணி விழாவுக்கு ஓர் அற்புதமான மலர் ஒன்று வெளியிடார் . பாரதி பாரதி தாசன் ஆகியோரிடம் ஒரு பன்முகப் பார்வை இருந்தது. இதை நாம் நமது தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். கவிஞர் மீராவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்கள் அறிவித்துள்ள “ மீரா விருது” கவிஞர் ஒருவர் படைத்த முதல் கவிதைத் தொகுதிக்கு ரூ5000/- பாராட்டுப் பத்திரம் என்று அறிவிக்கப் பட்டது.. இந்த ஆண்டுக்கான பரிசை கவிஞர் பிரான்சிஸ் கிருபா தன்னுடைய “ மெசியாவ்ின் காயங்கள் “ என்ற நூலுக்குப் பெற்றார்.ஒவ்வொரு ஆண்டும் விஜயா பதிப்பகத்தின் சார்பாக வழங்கப்படும் என்று உரத்த கரவொலிக்கு இடையே வேலாயுதம் அறிவித்தார். நூலையும் கவிஞரையும் பாராட்டிப் பேசிய மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ப. க பொன்னுசாமி தன்னுடைய நூலை வெளியிட மீரா எடுத்துக் கொண்ட அரிய முயற்சிகளை வியந்து பாராட்டினார். பரிசுக்கு உரிய நூலின் சில அம்சங்களைப் பாராட்டிவிட்டு நூலில் இடம் பெற்றுள்ள சில பாலியல் விகாரக் கவிதைகளுக்காக மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்தார். இனி எழுதும் போது இளம் கவிஞரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்வு செய்கிற குழுவினரும் எச்ச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இந்த விழாவின் மிக முக்கியமான நிகழ்வுகள் கவிஞர் மீரா நினைவகமாக ஆக்குவது என்று எடுக்கப்பட்ட தீர்மானமும் அதற்கான செயல் திட்டங்களும் ஆகும். பெரிய அளவில் நிதி திரட்டி நினைவகம், படிப்பகம், நூலகம் ஆகியன அமைத்து ஆண்டு தோறும் மீரா நினைவை கவிஞர் விழாவாக நடத்துவது என்று அறிவிக்கப் பட்டது. இன்னொரு முக்கிய நிகழ்ச்சி கவிஞரின் முதலாம் நினைவு நாளில் சாகித்திய அகாதமி தன்னை இணைத்துக் கொண்டு” என் சாளரத்தின் வழியே” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது ஆகும். தமிழக அகாதெமியின் திட்ட அலுவலர் டாக்டர் இளங்கோவன் மீராவுடன் அகாதமி இணைந்து பெருமைபெறுகிறது என்றார். மீரா நினைவக நிதி பற்றியும் அதன் செயல் பாடுகள் பற்றியும் பேசிய பேராசிரியர் சாகித்திய அகாதமியின் உறுப்பினர் பாலச்சந்திரன் இதுவரை பெரிய பெரிய அரங்குகளில் நடந்த அகாதெமி கவிஞர் மீராவுக்காக சிவகங்கையின் வீதிக்கே வந்துள்ளது என்றார் முதலாவது நினைவு நாளில் திரண்டிருந்த அனைவருக்கும் மீரா அமைத்த இலக்கிய ராஜ பாட்டை தொடர்ந்து மேலே மேலே செல்லும் எனும் நம்பிக்கை நெஞ்சமெல்லாம் நிரம்பியிருந்தது . அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று தந்தையைப் போல் தாகமும் வேகமும் கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கும் கதிர், இரண்டு விழா நிகழ்ச்சியின் போது மீராவின் சாகாத வனம் கவிதையை மீராவின் பேத்தி பிரபஞ்சனா இசைத்து வழங்கியது.

பிறவழிப் பாதைகள் - அன்னம் மீரா

<>கோபால் ராஜாராம்

அன்னம் பதிப்பகத்தின் மீரா மரணச் செய்தி தமிழ் இலக்கியப் பதிப்புலகத்திற்கு ஒர் பெரும் இழப்பு. வருத்தமும் சோகமும் அளிக்கும் ஒரு செய்தி அது. சிவகங்கை நகரை தரமான புத்தகங்களின் பதிப்பிற்கான மிக முக்கியமான நகராய் ஆக்க முடியும் என்று எவரும் நினைத்திருக்க முடியாது. சார்பற்ற முறையில் எல்லோருடைய புத்தகங்களையும் வெளியிட்டவர் மீரா. மீராவின் கவிதைத் தொகுப்பை மிகச் சிறப்பாகக் கருதாத வெ சாவின் புத்தகத்தைக் கூட வெளியிட அவர் தயக்கம் காட்டியதில்லை. 'அன்னம் விடு தூது ' பத்திரிகை சுபமங்களாவிற்கு ஒரு விதத்தில் முன்னோடி. அதன் பக்கங்களில் இழையோடிய நகைச்சுவையும் சரி , தரமான எழுத்தும் சரி மிகச் சிறப்பானவை. தொடர்ந்து வரமுடியாமல் போனாலும், சென்னையிலிருந்து தான் சிறப்பான வெளியீடுகளோ, பத்திரிகைகளோ வரவேண்டும் என்ற அவசியம் இ இல்லை என்று நிரூபித்தது மீராவின் சாதனை. திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் அவர் திறந்த புத்தக விற்பனை நிலையங்களும் பல இலக்கியவாதிகள் மையம் கொள்ளக் காரணமாயின. நான் கல்கத்தாவிலிருந்த போது பாதல் சர்க்காரின் 'ஏவம் இந்திரஜித் 'தை மொழியாக்கம் செய்து அனுப்பிவைத்தேன். அப்போது அவருடன் எனக்கு நேரடி அறிமுகம் எதுவும் இல்லை. ஆனால், உடனடியாக அவர் வெளியிடச் சம்மதம் தெரிவித்து எழுதினார். பிறகு என் கவிதைத் தொகுதி வந்தபோதும் சரி, பாதல் சர்க்கார நாடகங்கள் தொகுப்பு வெளிவந்தபோதும் சரி அவர் காட்டிய ஆதரவு மறக்க முடியாதது. கி ராஜ நாராயணனின் கதைத் தொகுதியாகட்டும், கோணங்கியின் தொகுதியாகட்டும், நாஞ்சில் நாடனின் தொகுதியாகட்டும் எல்லா தரப்பு இலக்கியவாதிகளையும் கெளரவித்தவர் அவர். சிறு பத்திரிகை இயக்கத்தை ஒட்டி வளர்ந்த தரமான புத்தக வெளியீட்டில் அவர் முயற்சி முதன்மையானது. Snobbery இல்லாத அணுகல் அவருடையது. ஏராளமான வாசகர்களைத் தமிழுக்குக் கொண்டு சேர்த்ததில் அவர் பணி முக்கியமானது. சமீபத்தில் அவருக்குக் கவிக்கோ விருது வழங்கப் பட்டது. சரியான எழுத்தைத் தேடிச் சென்று அரவணைத்துக் கொண்ட அவர் தன் பதிப்பகத்திற்கு அன்னம் என்று பெயரிட்டதும் பொருத்தமே. அவர் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.