கவிஞர் சிற்பி அவர்களின் பாச விரல்களைப் பிடித்து நடந்த எனக்கு அவரைப் பற்றி எழுதுவது என்பது ஒரு கவிஞன் சிறந்த கவிதைகளைப் படிப்பதில் மகிழ்ச்சி கொள்வது போல மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. எனவே தான் திரு. சேதுபதி அவர்கள் தொலைபேசியில் கூறியவுடன் என் மகிழ்வின் எல்லைக்கு வரையறை இல்லை என்றே சொல்ல வேண்டும்.
என் மூச்சுக் காற்று இப்பூவுலகைத் தொட்ட நாள் முதல் இன்று வரை எனக்கு வாழ்வில் கிடைத்த மிகப்பெரும் பேறாகக் கருதுவது என் தந்தையாருக்கு அமைந்திட்டதொரு அருமையான நண்பர்கள். என் அப்பாவின் நட்புக்கள் எனும் நெடிய பயணம் என் உயிர் உள்ளவரை தொடர்ந்திடும் என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்ததுதான் கவிஞர் சிற்பி அவர்களின் பவள விழாவிற்கான வாழ்த்துகளைப் பதிவு செய்வதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
கவிஞர் சிற்பி அவர்களை நான் என் இளம்பருவம் முதல் பலமுறை சந்தித்திருக்கிறேன். என் தந்தையார் அவர்கள் ‘சிற்பி மாமா' என்று எனக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்திய அடுத்த விநாடியே கவிஞர் அவர்கள் என்னை அருகில் அழைத்து தட்டிக்கொடுத்த அந்த பாசத்தின் விதை என் நெஞ்சில் பத்திரமாக உறைந்துள்ளது.
என் தந்தையார் கவிஞர் மீரா அவர்களுக்கும் கவிஞர் சிற்பி அவர்களுக்கும் உள்ள உறவு ஆழமான பாசமும் நேசமும் கலந்திட்டதொரு மென்மையான உணர்வு. நட்பு என்பதன் விளக்கத்திற்கான பாசத் திறவுகோல். என் அப்பாவும் கவிஞர் சிற்பி அவர்களும் பேசிக்கொள்ளும் விநாடிகள் எல்லாம் நகைச்சுவையும் மகிழ்ச்சியும் அங்கே பொங்கி வழியும். வீட்டுப் பாடங்களைப் பாதியில் வைத்து விட்டு, எங்கள் ‘அன்னம்' வீட்டின் நுழைவுவாயிலில் கம்பீரமாய் வீற்றிருக்கும் பாரதியை ரசித்துக்கொண்டே என் அப்பாவின் அறைக்குள் என் விழிகளைப் பதிய வைத்து அங்கே தவழ்ந்தோடுகின்ற பேச்சின் சாராம்சங்களைப் புரிந்து கொள்ள முடியாமல், அதே சமயத்தில், ஒரு தாயின் மொழிக்கு பதிலுரைக்க ஆசைப்படும் குழந்தையின் தத்தளிப்புக்களோடும் அவர்களின் நட்பின் சுவாரஸ்யம் கலந்த பேச்சுக்கள் எனக்குள் அகப்படாமல் சிரிப்புகளை உதிர்க்கக் கற்றுக் கொடுத்த அந்த ரசனை மிகுந்த நாள்கள் இன்னும் நிறைந்திருக்கின்றன என் கண்களுக்குள்.
கவிஞர் சிற்பி அவர்களின் மேடைப் பேச்சுக்களில் நான் முதன்முதலாக அந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் அமர்ந்து கேட்டது பாரதி நூற்றாண்டு விழாவில். அதே போன்று குறள் விழா, அப்பாவுடன் நான் உடன் சென்ற விழாக்கள், கவியரங்கங்கள்... என் தந்தையாருக்காக கவிக்கோ நடத்திய ‘கவிக்கோ விருது விழா' போன்ற எனக்குக் காணக்கிடைத்த அரிய வாய்ப்புகள் எல்லாவற்றிலும் கவிஞர் சிற்பி அவர்களின் கம்பீரமான பேச்சு என் செவிப்பறைகளில் இன்பத் தமிழைப் பாய்ச்சியது மட்டுமல்லாமல், தாய்ப் பறவையின் சிறகோசை கேட்டதும் தலைநிமிரும் குஞ்சுப் பறவை போல, கவிஞர் அவர்களது ரசனை மிகுந்த பேச்சைக் கூர்ந்து கேட்ட நிமிடங்கள் எல்லாம் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்திய பொழுதுகளாகவே மாறிப்போனது.
என் தந்தையார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கவிஞர் சிற்பி அவர்கள் மிகவும் சிறப்பு செய்ததை அடிக்கடி என் தாயார் நினைவுகூறிக் கொண்டே இருப்பார்கள். அந்த நன்றியுணர்வு எப்பொழுதும் எங்கள் அனைவரது நெஞ்சிலும் புதையுண்டிருக்கிறது. படர்ந்து விரிந்த அவர்களது அன்பின் வாசலை எவராலும் தொட முடியாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக, என் தந்தையார் அவர்கள், கவிஞர் சிற்பி அவர்களின் ‘மெளன மயக்கங்கள்', ‘பாரதி கைதி எண் 253' போன்ற புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
சமீபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற ‘கவிக்கோ விருது விழா'வில் கவிஞர் இரா. மீனாட்சிக்கும், கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் கவிக்கோ விருதுகள் வழங்கப்பட்டன. அவ்விழாவில் கவிஞர் சிற்பி அவர்களை நீண்ட இடைவெளிக்குப் பின்பு சந்தித்தேன். கவிஞர் அவர்களது சிறப்புரையில் மெய்மறந்தேன். கவிஞர் அவர்களை அருகில் சென்று சந்தித்தேன்.
இதயத்தின் அடியாழம் வரை நிறைந்திருந்த என் இளமையில் பூத்த பாசத்தின் நினைவுகள் எல்லாம் கண்ணீரால் சூழ்ந்தன. என் தந்தையாரை சந்தித்தது போன்ற இன்பம் என் உள்ளத்தைச் சுற்றிலுமாய். கவிஞர் அவர்களும் அதே பழமை கலந்த நினைவுகளுடன் என்னிடம் மிகுந்த பாசத்துடன் அம்மாவின் நலனையும் என் நலனையும் விசாரித்தார். அந்த நெகிழ்வான தருணம் என்றும் எனைவிட்டு நீங்கா இன்பமழைதான்.
நெய்வேலிக்கு வந்தவுடன் கவிஞர் அவர்களை சந்தித்ததைக் குறித்த நிகழ்வை என் அம்மாவிடன் தெரிவித்தபோது மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள். கவிஞர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன். பல அலுவல்களுக்கிடையில் எனக்கு பதில் கடிதம் அனுப்பி எங்கள் குடும்பத்தின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அக்கடிதத்தை நான் பத்திரமாக- “பத்திரம்” ஆக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
தன்னடக்கமும் சீரிய பண்பும் உயர்ந்தோங்கிய ஒரு மாமனிதரை, ஒரு பெருங்கவிஞரை என் வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு என் தந்தையாரை நினைவு கூர்ந்து நன்றி கூற ஆசைப்படுகிறேன்.
என் தந்தையார் இன்று இருந்திருந்தால் சிற்பி மாமாவுக்கு வாழ்த்துகளைப் பாமாலைகளால் தொடுத்திருப்பார். நானோ ஒரு இளம்பிறை.
கவிஞர் சிற்பி அவர்களுக்கு
பவள விழா போல
நூற்றாண்டு விழாவும்
இனிதாக, சிறப்பாக நடைபெற எங்கள் குடும்பத்தார் அனைவரின் நல்வாழ்த்துகளையும் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-அன்புடன்,
செல்மா.
( ‘சிற்பி பவள விழா நிகழ்வுகள் - பதிவுகள் ' - பக்கங்கள் 17,18ல் இடம் பெற்றது)