Tuesday, April 26, 2011

காலங்களில் ‘அவர்' என் வசந்தம்

கவிஞர்.மீராவின் மனைவி இரா.சுசீலாவிடம் ஒரு நேர்காணல்...


     தமிழ்மொழி, பொதுவுடமை, சமுதாய சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம் இவற்றில் பாரதி, பாரதிதாசனையொத்த எழுச்சிக் கவிஞர் தமிழுலகில் ‘மீரா' என்றறியப்படும் மீ. ராசேந்திரன்! பாவேந்தர் பாரதிதாசன் ... என் குரு! மகாகவி பாரதி... என் தெய்வம்! என்று தன் ‘மீரா கவிதைகள்' நூல் முன்னுரையில் குறிப்பிடும் இவர், கவிஞர், கல்லூரி முதல்வர், தொழிற்சங்கவாதி; மொழிப்பற்றாளர்; பதிப்பாசிரியர்; வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்! ‘கவி'என்கிற கவிதை இதழ், ‘அன்னம்', ‘அன்னம் விடு தூது'என்ற இதழ்களின் ஆசிரியர்; பல பதிப்புகள் கண்ட ‘கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள்' ,'மூன்றும் ஆறும்', ‘ஊசிகள்' போன்ற நூல்களின் படைப்பாளி; மனிதாபிமானம் மிக்க ஒரு பகுத்தறிவுவாதி... எனப் பல்வேறு ஆளுமைத் திறமைகளைக் கொண்டவர். சிவகங்கைக்காரர்.

     கவிக்கோ அப்துல் ரஹ்மான், டி.எம். அப்துல் காதர், கவிஞர்கள் சிற்பி, இன்குலாப், நா.காமராசன், மேத்தா, வைரமுத்து,பாலா, தமிழன்பன்,
 பி.சிதம்பரநாதன், முருகு சுந்தரம், அபி தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச் செல்வன், இந்திரன், காசி ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ.சேஷாசலம், க.வை.பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது, வைகை வாணன், இக்பால், பஞ்சு, ரவிசுப்ரமணியன், வசந்தகுமார்-இவர்கள் என் அங்கங்களைப் போன்ற சகோதரக் கவிஞர்கள். இவர்கள் என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே, நான் நானல்ல; நான் மட்டுமல்ல. எல்லாரும் கலந்த ஒரு அவதாரம். ஆமாம்... நான் செத்தாலும் வாழ்வேன்!( மீரா கவிதைகள் நூல் முன்னுரையில் மீரா).

     மீரா பலரை உருவாக்கியவர்; அம்முயற்சியில் தன்னை ‘உரு'வாக்கிக் கொள்ள மறந்தவர். மீராவின் பாடல்களில் கவித்துவ ஒளிக்கீற்றுகள் பலப்பல உள்ளன. ஆனால், அவரோ மற்றவர்களின் ஒளிச்சேர்க்கையில், தனது நிறத்தை இணைத்துக் கொண்டவர். தன்னை இழக்கத் துணிந்தவர்.(அறிஞர். தமிழண்ணல்)

     உடல்நலக் குறைவால் தமது 63வது வயதிலேயே மரணம்(01.09.2002) தழுவிய அவருக்குக் கடந்த செப்டம்பரில் (23.09.2010) நெய்வேலியில் ஒரு நினைவுக் கூட்டம் நடந்தது.

     அதில் கலந்து கொண்ட மீராவின் துணைவியார் சுசீலா அம்மையாரிடமும், மகள் கண்மணி பாண்டியனிடமும் அவசரமாய் ஓரிரு வார்த்தைகள் பகிர வாய்ப்புக் கிடைத்தது.

     மறுநாள் மாலை, கண்மணி பாண்டியன் இல்லம் சென்று, ஆற அமர கவிஞர் பற்றிய நினைவுகளை, அவரது துணைவியாரிடம் பேச விழைந்தோம்.

     அம்மையாரின் எளிமையான தோற்றமும், மாறாத புன்னகையும் வசீகரித்தது எங்களை.

     கவிஞர் மீராவின் உன்னதங்களை, அவரது இலக்கிய நண்பர்கள் வாயிலாகவே வெகுவாக அறிகிறோம். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, அ. நல்லக்கண்ணு போன்ற அரசியலாரின் புகழ் மொழிகளையும் குறிப்பிடலாம்.

      சாகாத வானம் நாம்/ வாழ்வைப் பாடும்/ சங்கீதப் பறவை நாம்/ பெருமை வற்றிப் போகாத/ நெடுங்கடல் நாம்/ நிமிர்ந்து நிற்கும்/ பொதியம் நாம்; இமையம் நாம்/ காலத்தீயில் வேகாத பொசுங்காத/ தத்துவம் நாம்... பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் அரசியல் தலைவர்கள் அடிக்கடி மேடையில் எடுத்தாண்ட மீராவின் கவிதையொன்றின் சில வரிகள் இவை.

     அவருடனான 38 ஆண்டுகால (10.09.1964)-(01.09.2002) வாழ்தலில் ஒரு துணைவியாக கவிஞரைப் பற்றிய அனுபவங்களை கேட்டறியும் ஆவலை வெளியிட்டோம்.

     தென்றலாக வருடும் மென்குரலில் துவங்குகிறார்...“எனக்கு கல்யாணம் செய்யும் போது 16-17வயசு. அபூர்வமான மனிதர் என் கணவர். சோர்வில்லாதவர். நகைச்சுவையாளர். யாரையும் கடிந்து பேசமாட்டார். எல்லாருக்கும் தன்னாலான நல்லதை செய்யப் பிரயாசைப்பட்டவர்.

     ருசித்து சாப்பிடுவார். அசைவ பிரியாணியும், மீன் குழம்பும் ரொம்ப இஷ்டம். காபி ரொம்பப் பிரியம். கேட்கறப்போவெல்லாம் தரணும். ஆசிரியர் போராட்டத்துல கலந்துகிட்டப்ப சிறைக்குப் போய் வந்த பெறகு, ‘அங்க சாப்பாடெல்லாம் எப்படி'ன்னு கேட்டதுக்கு, ‘பிரமாதம், வீட்டைவிடக் காபி நல்லாவேயிருந்துச்சு'ன்னார். (சிரிப்பு)

     கடைசியா உடம்பு முடியாமப் போனபோது கூட, ‘பத்தியமாச் சாப்பிட்டு 100 வயசு வாழறதை விட, விருப்பமானதைச் சாப்பிட்டு எந்த வயசிலயும் போகலாம்' அப்படீம்பார்.

     இராத்திரி படுக்க ரெண்டு மணியானாலும் விடியக்காலையில 4-5 மணிக்குள்ள எழுந்திடுவார். பேராசிரியர் வேலையிலயிருந்து ஓய்வு பெற்ற பெறகும் கூட, பதிப்பிக்கிற நூல்களுக்கு அச்சுப் பிழை சரி செய்யறது, பேப்பர், இங்க் மத்த பொருட்கள் வாங்கிட்டு வரது, படிக்கிறது, எழுதுறது, தேடி வர்ற நண்பர்கள் கிட்ட பேசறதுன்னு நாள் பூரா ஏதாவது செய்துகிட்டேயிருப்பார்.

     தினம் தினம் பயணத்துக்கும், புத்தகக் கட்டுகளை சுமந்து எவ்வளவு தூரமும் நடக்கவும் அசராதவர். வெளியே போனா கடைசி வண்டியாவது பிடிச்சு ஊருக்கு வந்து வீட்டில் படுத்தாத் தான் அவருக்கு நிம்மதியாயிருக்கும்.

     இப்பவும் ஊருக்குப் போயிருக்கார்... வந்துடுவார்ன்னு தான் நெனைச்சு நெனைச்சு, ஒரேயடியாப் போயிட்ட துக்கத்தைக் கரைச்சுக்கறேன். சிவகங்கையில எங்க வீட்டுல 30 வருஷமா ஒரு அம்மா வேலை பாத்துச்சு. இப்பவும் நான் ஊருக்குப் போனா அப்படித்தான் சொல்லும்... “ஐயா ஊருக்குப் போயிருக்கார்ம்மா... வந்துடுவார், கவலைப் படாம இருங்க.”

     கவிக்கோ விருது வாங்க சென்னை போன போது, என் தம்பி கார்த்திகேயன் வீட்டில் திருவான்மியூரில் ஒரு மாசமிருந்தோம். தினமும் சாயங்காலமானா அப்துல் ரஹ்மான், மேத்தா, இந்தியா டுடேயிலிருந்த விஸ்வநாதன் எல்லாரும் இவரைப் பார்க்க வந்துடுவாங்க. என் தம்பி, இவர், அவங்க மூணு பேர் எல்லாருமா பீச்சுக்கு வாக்கிங் போயிட்டு 8.30 மணிக்கு மேல வீடு திரும்புவாங்க. அந்த ஒரு மாசமும் என்னோடவே அதிக நேரமிருந்தார். ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் அப்ப.

     இவ்வளவு வேலை செய்தவரை, இவ்வளவு பேரோடு பேசியவரை நம்மோட ஒரு மணி நேரமாவது பேச வைக்க முடியாமப் போனோமேங்கற ஏக்கம் எப்பவுமிருந்துச்சு. அதுவும், ஜெயலலிதா கண்ணகி சிலையை பீச்சுல இருந்து அப்புறப்படுத்தினப்போ தீர்ந்துச்சு. ‘அப்படியென்ன அந்த சிலை மேல பயப்படும் படி'ன்னு கேட்டேன் அவரை. அதிசயமா, ஒரு மணி நேரத்துல சிலப்பதிகாரம் காப்பியம் முழுக்க எனக்குப் புரியுற விதமா பாடம் மாதிரி சொன்னாரு. அந்த ஒரு மணி நேரப் பேச்சு இப்பவும் நினைவிருக்கு எனக்கு. மறக்கவே முடியாது.

     இப்ப, அவர் இல்லாத ஒரு குறைதான்... எது இருந்தும் அவர் இல்லாதது பெரும் குறைதான் எனக்கு.”

     காலமாகிப் போன தன் வசந்தகால நினைவுகளின் அழுத்தம் அவரின் குயில் குரலை இறுகப் பிடித்து கமறச் செய்கிறது.

     “உங்க அண்ணிய ரொம்ப காலமாவே நான் புரிஞ்சுகிடாமயே இருந்துட்டேன் ரவி” எனக் கும்பகோணத்தில் வைத்துக் கடைசியாகப் பார்த்த போது மீரா தன்னிடம் வருந்தியதாக ரவி சுப்ரமணியம் தன் இரங்கல் கட்டுரையில் (மீரா சிறப்பிதழ்-மண்/3, பக்கம் 47) குறிப்பிட்டிருப்பார். மீராவின் நண்பர்கள் அனைவரும் அவரது துணைவியாரை அண்ணி என்று தான் அழைப்பர்.

     அதைப் படித்த போது மீராவின் ஆதர்சக் கவிஞர் கலீல் கிப்ரானின் ‘பிரியும் வேளை வரும் வரை தன் அடியாழத்தை அன்பு அறிவதில்லை' என்ற வரிகள் நினைவை நனைத்தன.

     முகில்களிடையே இருக்கும் வானவில்லாய் பிரபல மனிதர்களின் ஜொலிப்பு. அவர்களுக்கு வாழ்க்கைப் பட்ட மகராசிகளோ தத்தம் ஆசைகள், கனவுகள், தேவைகள், ஏக்கங்களைக் கனியறியும் ஆவலில் தம் பூவிதழ்களை உதிர்த்துக் காத்திருக்கும் பழமரங்கள் போலாகின்றனர்.

     கணவர் பாதி குழந்தைகள் பாதி கலந்து செய்யப்பட்ட இவர்களது தினசரிப் பொழுதுகளூடே கொண்டாட யாருமற்றுப் பரண்மேலேற்றிய பழங்குப்பையாய் இவர்களுக்குள் ஒளிந்திருக்கும் உள்ளக் குமைச்சல்களை தமக்குள்ளேயே புதைத்துக்கொண்டு நீர்த்துப் போகச் செய்கின்றனர்.

     சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுத்தலும், அர்ப்பணிப்பு உணர்வும் வெற்றிகரமான இல்வாழ்வுக்கு அத்தியாவசியமாகிறது. சாதனை மனிதர்களின் துணையாகிறவர்களுக்கு இவற்றின் சதவீதம் சற்றுத் தூக்கலாகவே இருந்தால்தான் இணைநலம் இனிதாகிறது.

     “யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்” என்ற செல்லம்மா பாரதியின் வானொலியுரை (1951, திருச்சி வானொலி நிலையம்) வரும் தலைமுறைகளிலாவது மாறி ஒலிக்கட்டும்... ஒலிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையோடு விடைபெற்றோம்.

நவம்பர் 2010  'கிழக்கு வாசல் உதயம்' இதழில் வெளியானது. 
 
நேர்காணல்: நிலாமகள், http://www.nilaamagal.blogspot.com/

No comments:

Post a Comment